கிறிஸ்து இல்லாமலே ஜெபிக்கலாம், வேதம் வாசிக்கலாம், ஆலயம் செல்லலாம், உபவாசிக்கலாம். சுவிசேஷ ஊழியம் கூடச் செய்யல்லாம், ஆனால் கிறிஸ்துவை உடையவன் இவற்றிலும் மேலான காரியங்களைச் செய்யத் துவங்குவான். நம்மில் கிறிஸ்து இருந்தால் என்னவெல்லாம் செய்வோம்?
1. பாவத்தை வெறுக்கத் தொடங்குவோம். அழுக்கான சிந்தை நம்மில் இராது. சரீரத்தின் செய்கைகளை அழித்தவராயிருப்போம். இது பாவமா அது பாவமா என்ற ஐயமோ, இதுமட்டும் பாவம் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆசையோ இருக்காது.
கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.கலாத்தியர் 5:24
மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள். ரோமர் 8:13
2. ஏழை எளியவர்களுக்கு உதவுவதில் முதல்வராயிருப்போம். எளியவனைக் கண்டால் எடைபோட்டுக்கொண்டிருக்க மாட்டோம்.
நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக. லூக்கா 14:13
வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும். சங்கீதம் 112:9
3. கனி தருகிறவர்களாக இருப்போம். நற்குணம் பொருந்தியவராய்க் காணப்படுவோம். பழைய சுபாவங்களைக் களைந்து போடும் ஆவலும், அதற்கு ஆவியானவரின் ஒத்தாசையை நாடுபவர்களாகவும் காணப்படுவோம். மட்டமான சிந்தனைகளை முளையிலேயே கிள்ளி எறிபவர்களாக இருப்போம்.
மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள் மத்தேயு 3:8. ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்;கலாத்தியர் 5:23,24
4. கிறிஸ்துவுக்காகத் துன்பம் அடைவோம். சொகுசான வாழ்வு கிடையாது என்பதை அறிந்திருப்போம். கிறிஸ்துவுடன் சிலுவை சுமப்பது என்றால் என்ன என்ற தெளிவு நம்மில் இருக்கும். உலகத்துடன் ஒத்து வாழ்ந்து வாழ்க்கையை நிம்மதியாக்கிக் கொள்ளப் பிரயத்தனப் படமாட்டோம்.
..அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்; யோவான் 15:20
5. சக கிறிஸ்தவனின் ஆவிக்குறிய வளர்ச்சியில் அக்கறை உடையவராக இருப்போம். சரீரமாகிய கிறிஸ்துவின் சபையில் அனைவரும் அவயங்கள் என்ற சிந்தை இருக்கும். சககிறிஸ்தவன் போலி உபதேசத்தில் விழுந்தால் எச்சரிக்கவும் தூக்கி விடுபவர்களாகவும் இருப்போம்.
சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார். I கொரிந்தியர் 12:25
எனவே, இவற்றில் ஒன்றோ, ஒன்றுக்கு மேற்பட்டதோ நம்மில் இல்லையானால் நம்மை நாமே வஞ்சித்துக் கொள்ளாதபடி நம்மைச் சீர்த்தூக்கிப் பார்த்துக் கிறிஸ்து இயேசுவின் சிந்தை நம்மில் உள்ளதா என்று அறிந்து கொள்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக