*வாக்குத்தத்தம்*
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். தேவனுடைய கிருபையால் உங்களை இந்த வாக்குத்தத்த செய்தியின் மூலம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
தேவன் *சங்கீதம் 121ம் அதிகாரம் 3ம் வசனத்தை* வாக்குத்தத்தமாக கொடுக்கிறார். *'உன் காலைத் தள்ளாடவொட்டார், உன்னைக் காக்கிறவர் உறங்கார்'* (சங்கீதம் 121:3).
தேவன் 'உன் காலைத் தள்ளாடவொட்டார்' என்று சொல்வது நம்முடைய நடைகளைக் குறிக்கிறது. எனவே தாவீது, 'என் காலடிகள் வழுவாதபடிக்கு, என் நடைகளை உமதுவழிகளில் ஸ்திரப்படுத்தும்' (சங் 17:5) என்று சொல்லுகிறார். உங்களுடைய நடைகள் எப்படி இருக்கிறது? வேதம் துன்மார்க்கருடைய வழியில் நடவாதீர்கள் என்று நம்மை எச்சரிக்கிறது.
தேவன் 'உங்கள் கால்களை தள்ளாட விடமாட்டேன்' என்று வாக்குத்தத்தம் செய்கிறார். தேவன் உங்கள் கால்களை உறுதிப்படுத்தவே உங்களை இரட்சித்தார். 'பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி, நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார், அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள்' (சங் 40:2,3).
நம்முடைய கால்களை உறுதியாய் இராதபடி மூன்று காரியங்கள் நம்மைத் தடுக்கிறது. 1. தள்ளாடுதல், 2. சறுக்குதல் 3. வழுவுதல்.
'ஆனாலும் என் கால்கள் தள்ளாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பிற்று' (சங் 73:2). 'என் காலடிகள் வழுவாதபடிக்கு, என் நடைகளை உமதுவழிகளில் ஸ்திரப்படுத்தும்' (சங் 17:5).
எப்பொழுது உங்கள் சரீரத்தில் பெலன் இல்லையோ அப்பொழுது உங்கள் கால்கள் தள்ளாடும். 'பலவான்களின் வில் முறிந்தது, தள்ளாடினவர்களோ பலத்தினால் இடைகட்டப்பட்டார்கள்' (1சாமு 2:4). அதுபோல நீங்கள் எப்பொழுது பரிசுத்தத்தில், விசுவாசத்தில், தேவனைச் சார்ந்து கொள்வதில், தேவனுடைய அன்பில் குறைவுபட்டு பெலனற்று காணப்படும் போது உங்கள் கால்கள் தள்ளாடுகிறது. எப்பொழுத நீங்கள் பெலனற்றுத் தள்ளாடுகிறீர்களோ அப்பொழுது நீங்கள் தோல்விகளைச் சந்திக்கிறீர்கள், உங்கள் சத்துருக்கள் உங்களை மேற்கொள்கிறார்கள். 'அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச் செய்தருளும்' (சங் 13:4).
இன்றைக்கு தேவன் உங்கள் தள்ளாடுகிற கால்களை பெலப்படுத்தும்படியாய் தம்முடைய வார்த்தையை அனுப்புகிறார். 'விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கப்பண்ணி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர்' (யோபு 4:4).
'கர்த்தாவே, என்னை நியாயம் விசாரியும், நான் உத்தமத்திலே நடக்கிறேன், நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை' (சங் 26:1). உத்தமத்திலே நடக்கிறவர்களும், கர்த்தரை நம்புகிறவர்களும் தள்ளாடுவதில்லை என்று தாவீது சொல்லுகிறார். நீங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கையில், உங்கள் வியாபாரத்தில், வேலை செய்யும் ஸ்தலத்தில், மற்றவர்களுக்கு, தேவனுக்கு உத்தமமாய்க் காணப்படுகிறீர்களா?
ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி, "நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்' (ஆதி 17:1-2). ஆபிரகாம் கர்த்தரை நம்பி உத்தமமாய் வாழ்ந்தான்; எனவே அவன் ஒரு போதும் தள்ளாடவில்லை. தேவன் வாக்குத்தத்தம் செய்ததைப் பெற்றுக்கொண்டான்.
நீங்கள் கர்த்தரை நம்பி உத்தமமாய் இருங்கள். தேவன் உங்களுக்குச் சொன்னதை நிறைவேற்றுவார். அவைகள் இனி தாமதிப்பதில்லை. 'கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்' (சங் 55:22).
எப்பொழுது நீங்கள் கர்த்தரை விட்டு உலகத்தாராய், துன்மார்க்கமாய், இருட்டில் வாழ்கிறீர்களோ அப்பொழுது உங்கள் கால்கள் சறுக்கும். இன்றைக்கு தேவன் உங்கள் கால்கள் சறுக்காதபடி உங்களைக் காக்கிறார். 'என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது' (சங் 94:18). தேவனுடைய கிருபையே உங்கள் கால்கள் சறுக்காதபடி காக்கிறது.
நோவா தேவனுக்கு பயந்து நடந்தான் அவனுக்கு கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. தேவனுக்குப் பயந்து நடவுங்கள். நோவாவைப் போல கிருபையைப் பெற்றுக்கொள்வீர்கள். உங்கள் கால்கள் சறுக்காது.
பல நேரங்களில் உங்களிடத்தில் உருவாகும் பெருமையின் நிமித்தமே கர்த்தருடைய கிருபையை நீங்கள் இழந்து போகிறீர்கள். தேவன் உங்களை உயர்த்தும் போது அவருடைய கரத்தின் கீழ் தாழ்மையாய் அடங்கி இருங்கள். 'ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்' (1பேது 5:6).
உங்கள் கால்கள் வழுவாதபடி தேவன் உங்கள் வழிகளை அகலமாக்குகிறார். 'என் கால்கள் வழுவாதபடிக்கு நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்' (2சாமு 22:37). எப்பொழுது தேவன் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைக்கும் நீங்கலாக்கி விடுவித்தாரோ அப்பொழுது தாவீது இந்த வார்த்தையைச் சொல்லுகிறார்.
உங்களுடைய வாழ்க்கையிலும் பல காரியங்களில் தடைகளை நீங்கள் சந்திக்கிறீர்கள். உங்களுக்கு முன்பாக எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு காரியங்கள் வாய்க்காமல் காணப்படுகிறது. இன்றைக்கு தேவன் உங்கள் காரியங்களை வாய்க்கும்படியாய் உங்கள் வழியை அகலமாக்குகிறார். இனி நீங்கள் வழுகிப்போவதில்லை. தேவன் உங்களுக்கு சமாதானத்தை கொடுக்கும்படி இன்றைக்கு உன் வழிகளை அகலமாக்குகிறார். உன்னுடைய சமாதானத்தைக் கெடுத்துக்கொண்டிருந்த பிரச்சனைகளும் போராட்டங்களும் இன்றோடு ஒழிந்தது. 'இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது, உன் மதில்களை இரட்சிப்பென்றும், உன் வாசல்களைத் துதியென்றும் சொல்லுவாய். இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார். உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை, கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார், உன் துக்கநாட்கள் முடிந்துபோம்' (ஏசா 60:18-20).
தேவன் உங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தின் படி உங்கள் கால்களைத் தள்ளாட விடமாட்டார். தேவனுடைய வார்த்தையை விசுவாசியுங்கள் அற்புதங்களைப் பெற்றுக்கொள்வீர்கள். அவருடைய வார்த்தை ஒரு போதும் வெறுமையாகத் திரும்பாது. 'வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும், தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.' (யூதா 1:24-25.)
- Pastor Daniel karthikeyan,
Senior Pastor - Church of the Firstborn.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக