வியாழன், 2 நவம்பர், 2017

உன் காலைத் தள்ளாடவொட்டார்

*வாக்குத்தத்தம்*

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!

ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.  தேவனுடைய கிருபையால் உங்களை இந்த  வாக்குத்தத்த செய்தியின் மூலம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

தேவன் *சங்கீதம் 121ம் அதிகாரம் 3ம் வசனத்தை* வாக்குத்தத்தமாக கொடுக்கிறார்.  *'உன் காலைத் தள்ளாடவொட்டார், உன்னைக் காக்கிறவர் உறங்கார்'* (சங்கீதம் 121:3).

தேவன் 'உன் காலைத் தள்ளாடவொட்டார்' என்று சொல்வது நம்முடைய நடைகளைக் குறிக்கிறது. எனவே தாவீது, 'என் காலடிகள் வழுவாதபடிக்கு, என் நடைகளை உமதுவழிகளில் ஸ்திரப்படுத்தும்' (சங் 17:5) என்று சொல்லுகிறார்.  உங்களுடைய நடைகள் எப்படி இருக்கிறது? வேதம் துன்மார்க்கருடைய வழியில் நடவாதீர்கள் என்று நம்மை எச்சரிக்கிறது.

தேவன் 'உங்கள் கால்களை தள்ளாட விடமாட்டேன்' என்று வாக்குத்தத்தம் செய்கிறார். தேவன் உங்கள் கால்களை உறுதிப்படுத்தவே உங்களை இரட்சித்தார்.  'பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி,   நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார், அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள்' (சங் 40:2,3). 

நம்முடைய கால்களை உறுதியாய் இராதபடி மூன்று காரியங்கள் நம்மைத் தடுக்கிறது. 1. தள்ளாடுதல், 2. சறுக்குதல் 3. வழுவுதல்.

'ஆனாலும் என் கால்கள் தள்ளாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பிற்று' (சங் 73:2). 'என் காலடிகள் வழுவாதபடிக்கு, என் நடைகளை உமதுவழிகளில் ஸ்திரப்படுத்தும்' (சங் 17:5).

எப்பொழுது உங்கள் சரீரத்தில் பெலன் இல்லையோ அப்பொழுது உங்கள் கால்கள் தள்ளாடும். 'பலவான்களின் வில் முறிந்தது, தள்ளாடினவர்களோ பலத்தினால் இடைகட்டப்பட்டார்கள்' (1சாமு 2:4). அதுபோல நீங்கள் எப்பொழுது பரிசுத்தத்தில், விசுவாசத்தில், தேவனைச் சார்ந்து கொள்வதில், தேவனுடைய அன்பில் குறைவுபட்டு பெலனற்று காணப்படும் போது உங்கள் கால்கள் தள்ளாடுகிறது. எப்பொழுத நீங்கள் பெலனற்றுத் தள்ளாடுகிறீர்களோ அப்பொழுது நீங்கள் தோல்விகளைச் சந்திக்கிறீர்கள், உங்கள் சத்துருக்கள் உங்களை மேற்கொள்கிறார்கள். 'அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச் செய்தருளும்' (சங் 13:4). 

இன்றைக்கு தேவன் உங்கள் தள்ளாடுகிற கால்களை பெலப்படுத்தும்படியாய் தம்முடைய வார்த்தையை அனுப்புகிறார்.  'விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கப்பண்ணி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர்' (யோபு 4:4).

'கர்த்தாவே, என்னை நியாயம் விசாரியும், நான் உத்தமத்திலே நடக்கிறேன், நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை' (சங் 26:1).  உத்தமத்திலே நடக்கிறவர்களும், கர்த்தரை நம்புகிறவர்களும் தள்ளாடுவதில்லை என்று தாவீது சொல்லுகிறார்.  நீங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கையில், உங்கள் வியாபாரத்தில், வேலை செய்யும் ஸ்தலத்தில், மற்றவர்களுக்கு, தேவனுக்கு உத்தமமாய்க் காணப்படுகிறீர்களா?

ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி, "நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்' (ஆதி 17:1-2). ஆபிரகாம் கர்த்தரை நம்பி உத்தமமாய் வாழ்ந்தான்; எனவே அவன் ஒரு போதும் தள்ளாடவில்லை.  தேவன் வாக்குத்தத்தம் செய்ததைப் பெற்றுக்கொண்டான்.
நீங்கள் கர்த்தரை நம்பி உத்தமமாய் இருங்கள். தேவன் உங்களுக்குச் சொன்னதை நிறைவேற்றுவார்.  அவைகள் இனி தாமதிப்பதில்லை.   'கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்' (சங் 55:22).
   
எப்பொழுது நீங்கள் கர்த்தரை விட்டு உலகத்தாராய், துன்மார்க்கமாய், இருட்டில் வாழ்கிறீர்களோ அப்பொழுது உங்கள் கால்கள் சறுக்கும்.   இன்றைக்கு தேவன் உங்கள் கால்கள் சறுக்காதபடி உங்களைக் காக்கிறார். 'என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது' (சங் 94:18). தேவனுடைய கிருபையே உங்கள் கால்கள் சறுக்காதபடி காக்கிறது.

நோவா தேவனுக்கு பயந்து நடந்தான் அவனுக்கு கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.  தேவனுக்குப் பயந்து நடவுங்கள்.  நோவாவைப் போல கிருபையைப் பெற்றுக்கொள்வீர்கள். உங்கள் கால்கள் சறுக்காது. 

பல நேரங்களில் உங்களிடத்தில் உருவாகும் பெருமையின் நிமித்தமே கர்த்தருடைய கிருபையை நீங்கள் இழந்து போகிறீர்கள்.  தேவன் உங்களை உயர்த்தும் போது அவருடைய கரத்தின் கீழ் தாழ்மையாய் அடங்கி இருங்கள். 'ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்' (1பேது 5:6).

உங்கள் கால்கள் வழுவாதபடி தேவன் உங்கள் வழிகளை அகலமாக்குகிறார்.  'என் கால்கள் வழுவாதபடிக்கு நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்' (2சாமு 22:37). எப்பொழுது தேவன் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைக்கும் நீங்கலாக்கி விடுவித்தாரோ அப்பொழுது தாவீது இந்த வார்த்தையைச் சொல்லுகிறார். 

உங்களுடைய வாழ்க்கையிலும் பல காரியங்களில் தடைகளை நீங்கள் சந்திக்கிறீர்கள்.  உங்களுக்கு முன்பாக எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு காரியங்கள் வாய்க்காமல் காணப்படுகிறது.  இன்றைக்கு தேவன் உங்கள் காரியங்களை வாய்க்கும்படியாய் உங்கள் வழியை அகலமாக்குகிறார்.  இனி நீங்கள் வழுகிப்போவதில்லை. தேவன் உங்களுக்கு சமாதானத்தை கொடுக்கும்படி இன்றைக்கு உன் வழிகளை அகலமாக்குகிறார்.  உன்னுடைய சமாதானத்தைக் கெடுத்துக்கொண்டிருந்த பிரச்சனைகளும் போராட்டங்களும் இன்றோடு ஒழிந்தது.  'இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது, உன் மதில்களை இரட்சிப்பென்றும், உன் வாசல்களைத் துதியென்றும் சொல்லுவாய்.   இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்.  உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை, கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார், உன் துக்கநாட்கள் முடிந்துபோம்' (ஏசா 60:18-20).

தேவன் உங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தின் படி உங்கள் கால்களைத் தள்ளாட விடமாட்டார்.  தேவனுடைய வார்த்தையை விசுவாசியுங்கள் அற்புதங்களைப் பெற்றுக்கொள்வீர்கள். அவருடைய வார்த்தை ஒரு போதும் வெறுமையாகத் திரும்பாது.     'வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும், தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.'  (யூதா 1:24-25.)

- Pastor Daniel karthikeyan,
Senior Pastor - Church of the Firstborn.

கானானியனாகிய சீமோன் SIMON

கானானியனாகிய சீமோன்  SIMON

இயேசுவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவர் கானானியனாகியசீமோன்.

இவரை தீவிரவாதியாகிய சீமோன் என்றும், செலோத்தே எனப்படும் சீமோன் என்றும் பைபிள் குறிப்பிடுகிறது.

இவருடைய சொந்த ஊர் கானாவூர்.

எனவே தான் கானானியனாகிய சீமோன் என அழைக்கப்பட்டார்.

கானாவூரில் தான் இயேசு தனது முதலாவது அற்புதத்தைச் செய்தார்.

ஒரு திருமண வீட்டில் திராட்சை ரசம் தீர்ந்து விட்டது. இயேசு ஆறு கற்சாடிகளில் நிரப்பப்பட்ட தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றி அற்புதம் செய்திருந்தார். 

இயேசுவின் சீடர்களில் இரண்டு பேருக்கு சீமோன் எனும் பெயர் உண்டு.

ஒருவர் சீமோன் பேதுரு. இயேசுவின் நெருங்கிய சீடர்களில் ஒருவர்.

அவரைப்பற்றி நிறைய செய்திகள் விவிலியத்தில் உண்டு.

கானானியனாகிய சீமோனின் பெயரோ விவிலியத்தில் அதிகம் இல்லை.

ஆனாலும் பணிவாழ்வைப் பொறுத்தவரை இவர் பிரமிக்க வைத்தார்.

இயேசு இறத்து, உயிர்த்து தூய ஆவியை சீடர்களுக்கு அனுப்பியபின் அவர்கள் துணிச்சலின் சிகரம் தொட்டார்கள்.

இயேசுவைப் பற்றி அறிவிக்க சீமோன் வடஆப்பிரிக்கப் பகுதிகளுக்குச் சென்றார்.

எகிப்து, சைரீன், மாரிடானியா, லிபியா போன்ற இடங் களில் அவர் தன்னுடைய நற்செய்தி அறிவித்தலை நடத்தினார்.

செலோத்துகள் என்னும் தீவிரவாதிகளின் குழுவில் இவர் இருந்ததாக மரபு வழிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மிகுந்த நெஞ்சுரமும், துடிப்பும் மிக்கவர்கள் இந்த செலோத்துகள். அந்த தீவிரம் அவருடைய நற்செய்தி அறிவித்தலிலும் வெளிப்பட்டது. 

கார்த்தேஜ் என்னும் நகரம் வட ஆப்பிரிக்காவில் இருந்தது.

அங்கே தன்னுடைய பணியை தீவிரப்படுத்தினார் சீமோன்.

நகரில் கிறிஸ்தவ மதம் காட்டுத் தீ போல பரவியது. சீமோன் மகிழ்ந்தார்.

எதிர்ப்பட்ட இடர்களை எல்லாம் ஜெபத்தினாலும், இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையினாலும் தகர்த்து தன்னுடைய பணியை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார் சீமோன்.

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஓரளவு கிறிஸ்தவ மதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய அவர், பலரை போதிக்கும் பணிக்காகவும் தேர்ந்தெடுத்தார்.

அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சீமோன் ஸ்பெயின் நாட்டுக்குப் பயணமானார்.

கி.பி. ஐம்பதில் பிரிட்டனில் கிளாஸ்டன்பரி என்னுமிடத்தில் கிறிஸ்தவத்தைப் போதிக்கத் தொடங்கினார் சீமோன்.

அப்போது அந்த நாடு ரோமர்களின் ஆளுகைக்குள் இருந்தது! எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் ரோமர்கள் லண்டனியம் என்னும் கோட்டையைக் கட்டி தங்கினார்கள்.

அந்த லண்டனியம் தான் இன்று லண்டன் என்று அழைக்கப்படுகிறது.

சீமோனின் மறை பரப்பும் பணி ரோமர்களிடமும், லத்தீன் மொழி பேசிய பூர்வீக வாசிகளிடமும் நடந்தது.

ரோமர்கள் பலர் சீமோனை எதிர்த்தார்கள். ஆனாலும் அப்போஸ்தலர்களுக்கே உரிய மன திடமும், துணிச்சலும் சீமோனிடமும் இருந்ததால் அவர் கலங்கவில்லை.

இயேசுவுக்காக இடர்கள் பட்டால் அது பெரும் பேறு என்று கருதினார்.

கி.பி. 59  கி.பி. 62–க்கு இடைப்பட்ட காலத்தில் பிரிட்டனில் வந்திருந்த ரோமர்களுக்கும், போவாதீசியர் களுக்கும் கடும் சண்டை நடந்தது.

அதில் ரோமர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள். அந்த காலகட்டத்தில் சீமோனும் பிரிட்டனை விட்டு வெளியேறி பாலஸ்தீனத்துக்கே திரும்பி வந்தார்.

பாலஸ்தீனத்திலிருந்து மெசபடோமியா பகுதிக்குச் சென்று மறைப்பணி ஆற்றினார் சீமோன்.

அங்கு சில காலம் பணியாற்றிய சீமோன், இயேசுவின் இன்னொரு அப்போஸ்தலரான ததேயுவைச் சந்தித்தார்.

ததேயுவும் அந்தப் பகுதியில் பணிசெய்து வந்தார். இறைப்பணிக்காய் அடிப்படை கட்டமைப்பை அங்கே உருவாக்கிவிட்டு இருவரும் பாரசீகம் நோக்கிப் பயணமானார்கள்.

பாசசீகத்தில் சுவானிர் என்னுமிடத்தில் நடந்த சிலை வழிபாட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்தார் ததேயு.

ததேயுவைச் சிறைபிடித்த அதிகாரிகள் அவரைக் கொல்ல முடிவு செய்தார்கள்.

ததேயு அப்போதும் துணிச்சலுடன் இயேசுவைப் பற்றி போதித்தார். அவர்கள் ததேயுவை ஈட்டியால் குத்திக் கொலை செய்தார்கள். 

ததேயுவுடன் பணி செய்து வந்த சீமோனும் அரசின் பார்வைக்குத் தப்பவில்லை. சீமோன் சிறைபிடிக்கப்பட்டார்.

ரம்பத்தால் அறுத்துக் கொல்லுங்கள் எனும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

“இயேசுவுக்காய் இறப்பது பெரும்பேறு. நீங்கள் மனம் திரும்புங்கள்” என்று சொல்லிக் கொண்டே ரம்பத்தால் அறுபட்டு இறந்து போனார் சீமோன்.

பைபிளில் அதிகம் பேசப்படாத அப்போஸ்தலர், அமைதியான நபர் சீமோன்.

ஆனால் தூய ஆவியின் நிரப்பு தலுக்குப் பின்பு மரணத்தைக் கூட துணிச்சலுடன் எதிர்கொள்ளும் வல்லமை பெற்றார்.

ஊரையும், நாட்டையும் விட்டு விட்டு கண்காணாத தூரத்துக்குச் சென்று இயேசுவைப் பற்றிப் போதித்தார்.

நாம் இயேசுவின் வழியில் வாழ்வதற்கும், இயேசுவைப் பற்றி அறிவிப்பதற்கும் முதலில் தூயஆவியினால் நிரப்பப்பட்டிருக்கவேண்டியது அவசியம்.

இயேசுவின் பால் கொள்ளும் உறுதியானவிசுவாசமே நம்மை இறை பணிகளில் உறுதியுடன் ஈடுபடச் செய்யும்.

இந்தஅடிப்படைச் சிந்தனைகளை அப்போஸ்தலர் சீமோன்
வாழ்விலிருந்து கற்றுக் கொள்வோம்.

|The WORD| : கண்கூடான பலன்!

|The WORD| : கண்கூடான பலன்!

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். (எபிரெயர் 11:6)

*காணமுடியாத விசுவாசமானது, கண்கூடான பலனைக் கொண்டுவருகின்றது!* கர்த்தராகிய தேவனும்கூட தம் பிள்ளைகளுக்கு நற்பலன்களை அளித்து, *அதன்வழியாகத் தம் நாமத்தை மகிமைப்படுத்தவும்* விரும்புகிறவர்!

விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதது! மட்டுமல்ல அவர் பிரியப்படுகிறவைகளையும் பெற்றுக்கொள்ளவும் முடியாது! ஆனால், முழு விசுவாசத்தையும் தேவன்மேல் வைக்கும்பட்சத்தில், தேவன் அளிக்கும் பலன் நிச்சயமாய் நம்மை வந்தடைகிறது!

பொதுவாக தேவநன்மைகளுக்கு பணம், பொருள், வேலை, சம்பளம் என ஓர் உருவத்தை நாம் வைத்துவிடுவதால், மெய்யான தேவநன்மைகளை நம்மால் காண இயலுவதில்லை! அவை ஒருவேளை *நாம் இருக்கும் சூழ்நிலைகளிலேயே சுகம், பெலன், ஜீவன், மகிழ்ச்சி, சமாதானம், தன்னிறைவு என இருக்கலாம்! அவை சாதாரணக் கண்களுக்கு அல்ல, விசுவாசக் கண்களுக்கு கண்கூடானவைதான்!* ஆமென்!!!
___________________________