முழுவதும் வாசிப்போர் பாக்கியவான்கள்.
*சாதிவெறி இந்துக்களால் கொடுமைப்படுத்தப்படும் தலித் இந்துக்களே கிறிஸ்தவத்தை புறக்கணிப்பது ஏன்?*
_"இந்து மதத்தின் தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் அந்த பிரச்சனையிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று நம்பி கிறிஸ்தவ மதத்தில் இணைந்தனர். ஆனால், கிறிஸ்தவத்திலும் அவர்கள் சாதி பாகுபாட்டால் அவமதிக்கப்படுவது வேதனையளிக்கிறது"_ என்று உயர்நீதிமன்ற நீதிபதி *அரிபரந்தாமன்* தெரிவித்துள்ளார்.
1999-ம் ஆண்டு நவம்பர் மாதம் கோவை மாவட்டம் *செகுடந்தாளி* என்னும் ஊரில் *முருகேசன்* என்ற 'தலித்' ஆதிக்கசாதியினர் பயணம் செய்த பேருந்தில் அமர்ந்து பயணம் செய்ய முயற்சி செய்தபோது பயணம் செய்யவிடாமல் அவரைத்தடுத்து, படுகொலை செய்தனர் ஆதிக்கசாதியினர்.
2017-ம் ஆண்டு மே மாதம் உத்தரபிரதேச முதல்வர் *யோகி ஆதித்யநாத்* தன் மாநில மக்களை சந்திக்க வந்தபோது தன்னை சந்திக்க வரும் தலித் மக்கள் சோப்பு, ஷாம்பு போட்டு குளித்திருக்கவேண்டும் என்று பகிரங்கமாக ஆணை பிறப்பித்திருக்கிறார்.
2002-ம் ஆண்டு மே மாதம் திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகாவிலுள்ள திண்ணியம் என்னும் ஊரிலுள்ள 'தாழ்த்தப்பட்ட' வகுப்பைச் சார்ந்த *கருப்பையா* என்பவர் ஆதிக்க சாதியினரிடம் கொடுத்த 2000 ரூபாயை திருப்பிக் கேட்டதால் அவருடைய வாயில் மலத்தைத் திணித்தனர் ஆதிக்க சாதியினர்.
2003 ஜூன் மாதம் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகாவிலுள்ள புதுகூர்பேட்டையிலுள்ள தலித் வகுப்பைச்சார்ந்த *முருகேசன்* என்பவர் 'உயர்சாதி' என்று அழைக்கப்படும் சாதியை சார்ந்த *கண்ணகி* என்பவரை திருமணம் செய்ய முயற்சி செய்ததால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் தருமபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்த 'தலித்' இளைஞர் இளவரசனும் 'உயர் சாதி' என்று அழைக்கப்படும் சாதியைச் சார்ந்த திவ்யாவும் திருமணம் செய்ததை அடுத்து இளவரசன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவிலுள்ள கோட்டூர் கீழமருதூரை சார்ந்த *பழனியப்பன்* என்பவர் தலித்' என்று அழைக்கப்பட்ட *அமிர்தவள்ளி* என்பவரை திருமணம் செய்ததால் இருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
2015ம் ஆண்டு ஜூன் மாதம் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த, தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சார்ந்த பொறியியல் பட்டதாரி *கோகுல்ராஜ்* என்ற இளைஞர், நாமக்கல் மாவட்டம் பரமத்தியைச் சேர்ந்த ஒரு 'உயர்சாதி' என்று அழைக்கப்படும் ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்ததால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
2016-ம் ஆண்டு ஜூலை மாதம் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் *சங்கர்* என்ற 'தாழ்த்தப்பட்ட' வகுப்பைச் சார்ந்தவர் 'உயர்சாதி' என்று அழைக்கப்படும் கெளசல்யா என்னும் பெண்ணை திருமணம் செய்ததால் பட்டபகலில் சாலையில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
2017-ம் ஆண்டு *விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம்* அருகிலுள்ள *சேஷசமுத்திரம்* என்னும் ஊரிலுள்ள *மாரியம்மன்* கோயிலில் தாழ்த்தப்பட்டவர்களால் நிறுவப்பட்ட தேர் ஆதிக்கசாதியினரால் பெட்ரோல் குண்டு வீசி கொளுத்தப்பட்டிருக்கிறது.
2017-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் உத்தரபிரதேச மாநிலம் புலண்ட்ஷர் மாவட்டத்தில் உள்ள கேட்டல்புர் பன்சோலி கிராமத்திலுள்ள தலித் வகுப்பைச் சார்ந்த *திலிப் குமார்* என்பவருடைய மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த *சாவித்ரி தேவி*, ஒரு ஆதிக்க சாதியினரின் வீட்டருகே வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியைத் தொட்டுவிட்டார் என்பதற்காக அந்த பெண்ணின் வயிற்றில் ஆதிக்க சாதியினர் மிதித்து கொன்றுவிட்டனர்.
2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதுச்சேரி அருகே உள்ள கூனிச்சம்பட்டு கிராமத்தில் அமைந்திருக்கும் திரௌபதியம்மன் கோயிலுக்கு சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமானோர் வந்து செல்வதுண்டு. இந்த கோவில் விழாவில் கலந்துகொள்ள அதே கிராமத்தை சேர்ந்த *சுதா* என்னும் 27 வயது பெண் சென்றுள்ளார். அவர் தாழ்த்தப்பட்டவராதலால் கோயிலில் இருந்த சிலர் சுதாவை தடுத்து நிறுத்தி கோவிலுக்கு உள்ளே வரக்கூடாது என்றும் வெளியே செல்லுமாறும் துரத்தியுள்ளனர். வெளியே செல்ல மறுத்த சுதா அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் சுதாவை மிரட்டி, அங்கிருந்தவர்கள் வெளியேற்றினர். கடைசிவரை சுதாவால் கோயிலுக்குள் செல்ல முடியவில்லை.
2018-ம் ஆண்டு மே மாதம் சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கு அருகிலுள்ள கச்சநத்தம் என்ற கிராமத்திலுள்ள 'தாழ்த்தப்பட்ட' வகுப்பைச் சார்ந்த இளைஞர்கள் மூவர் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்ததை சகிக்கமுடியாமல் ஆதிக்க சாதியினர் அவர்களை படுகொலை செய்துள்ளனர்.
2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் *ஜல்காவோன்* மாவட்டத்தில் உள்ள *வகாதி* என்ற கிராமத்தில் ஒரு கிணற்றில் மூன்று தலித் சிறுவர்கள் குளித்ததைக் கண்ட ஆதிக்க சாதியினர் சிறுவர்களை ஆடைகளை அணிய விடாமல், கொடூரமாக தாக்கி, மனிதாபிமானம் இன்றி ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் சில ஊர்களிலுள்ள தேநீர் கடைகளில் இன்றும் *'இரட்டை குவளை'* முறை நிலவிலுள்ளது. அதாவது தேநீர் கடைகளில் ஆதிக்க சாதியினருக்கு ஒரு குவளையிலும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு வேறு குவளையிலும் தேநீர் பரிமாறப்படுகிறது. சில கடைகளில் கடையிலுள்ள குவளையில் கொடுப்பதில்லை. மாறாக 'தாழ்த்தப்பட்டவர்' கொண்டுவரும் குவளையில் கொடுக்கிறார்கள்.
தாழ்த்தப்பட்டவர்கள் பல கோயில்களுக்குள் நுழைய ஆதிக்க சாதியினர் தடை விதித்துள்ளனர்.
உயர்சாதி என்று அழைக்கப்படுபவர்களின் தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் மிதிவண்டியில் அமர்ந்து ஓட்டிச்செல்லமுடியாது. இறங்கி உருட்டித்தான் செல்லவேண்டும்.
தாழ்த்தப்பட்டவர்கள் 'உயர்வகுப்பைச்' சார்ந்தவர்களை திருமணம் செய்ய அனுமதி இல்லை. அப்படியே பெற்றோரின் அனுமதியில்லாமல் திருமணம் செய்த பல தாழ்த்தப்பட்ட மணமக்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இன்றும் இந்தியாவின் பல ஊர்களில் உயர்சாதியினர் என்று அழைக்கப்படுபவர்களின் தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் செருப்பு அணிந்து நடக்க அனுமதியில்லை. அந்த அடக்குமுறையைமீறி நடந்தவர்கள் பலர் வன்முறைக்கு ஆளாகியிருக்கின்றனர்.
பல ஊர்களில் தாழ்த்தப்பட்டவர்களின் தெருக்களில் கோயில் தேரோட்டம் நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
இன்றும் இந்தியாவின் சில ஊர்களில் 'தலித்துகள்' என்று அழைக்கப்படும் மக்கள் 'உயர்சாதியினர், சூத்திரர்கள்' என்று அழைக்கப்படும் மக்களுடைய தெருக்களில் வேட்டியை மடித்துக்கட்டி நடக்க உரிமை இல்லை. அண்மையில் தமிழகத்தில் அப்படி சென்ற இளைஞர்கள் சிலரை கட்டிவைத்து அடித்திருக்கிறார்கள்.
பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் தலித்துகள் உருளவேண்டும் என்னும் சாங்கியம் இன்றும் இந்தியாவில் நிலவில் இருக்கிறது.
'புதிரை வண்ணார்' ஜாதியினர் நெல்லை மாவட்டத்தில் பகலில் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்ற நிலை 1932ஆம் ஆண்டு வரை இருந்தது.
பஞ்சமருக்குப் பேருந்தில் இடம் இல்லை என்று பயணச் சீட்டிலேயே அச்சிட்டிருந்த அவலம் 1935 வரை நீடித்திருந்தது.
நாடகக் கொட்டகையில் கட்டணத்தையும் செலுத்தினால்கூட நாடகம் பார்க்க தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது என விளம்பர அறிவிப்பிலேயே அச்சிட்டு விளம்பரம் செய்த நிலை 1900ஆம் ஆண்டுவரை இருந்தது.
_"பஞ்சமர்கள் (தாழ்த்தப்பட்டவர்கள்) இந்துக்களே அல்ல; ஏனென்றால் அவர்கள் வர்ண (சாதி) அமைப்பின்கீழ் இல்லை"_ என்று காஞ்சி சங்கராச்சாரியார் பகிரங்கமாக சாதிவெறியோடு அறிக்கை விடுத்திருக்கிறார்.
இப்படி இந்துத்துவ சாதிவெறியின் கொடுமையை அனுபவிக்கும் அந்த மக்கள் கூட அன்பே உருவான கிறிஸ்துவின் மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளாத காரணம் என்ன? இந்துத்துவாவில் இருக்கும் *அசிங்கமான* சாதி பாகுபாடுகள் கிறிஸ்தவத்திலும் இருக்கிறது என்பதை அந்த மக்கள் தெரிந்துவைத்திருக்கிறார்கள்.
*"பள்ளன், பறையன், சக்கிலியன்* என்பவர்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது" என்று எச் ராஜா போன்ற இந்துத்துவ அரசியல்வாதிகள் பொது மேடைகளில் தாராளமாகப் பேசுகிறார்கள்.
இந்துத்துவாவில் எவ்வளவுதான் தாழ்த்தப்பட்டவர்கள் இழிவுபடுத்தப்பட்டாலும், வேறுவழியின்றி ஆன்மீக அநாதைகளாக, சுயமரியாதை இல்லாமல் _'நாங்களும் இந்துக்கள்தான்'_ என்று அடம்பிடித்துக்கொண்டு பரிதாபமாக அங்கேயே இருப்பதற்கு காரணம் என்ன என்று நாம் யோசிக்கவேண்டும். தங்களை கடைமட்ட கீழ்சாதியைவிட தாழ்ந்த சாதி என்று கூறும் இந்த சாதி அடிமைத்தன கொள்கையை இந்துத்துவ மதத்தினர் இறைக்கட்டளையாக நம்பி பின்பற்றுகிறார்களே! இதைவிட கொடுமையான முட்டாள்தனம் இந்த உலகில் வேறு என்ன இருக்கமுடியும்? ஆனால் அந்த மக்கள் அந்த சிறைச்சாலையை விட்டு வெளியேறமுடியாத காரணம் என்ன என்று நாம் சிந்திக்கவேண்டும்.
*_நிறைவானது வரும் போது அரைகுறையானது ஒழிந்துபோகும். (1 கொரிந்தியர் 13:10)_* என்று இறைவார்த்தை நமக்கு கற்றுத் தருகிறது.
*மிக்ஸி (Mixie)* கண்டுபிடிக்கப்பட்டவுடன் *அம்மிக்கல்* ஒழிந்தது. *கிரைண்டர் (Grinder)* கண்டுபிடிக்கப்பட்டவுடன் *ஆட்டுரல்* ஒழிந்தது. அதுபோல தெய்வீக அன்பை போதிக்கும் கிறிஸ்தவம் இந்த மண்ணில் வந்தவுடன் சாதியத்தை உருவாக்கி வளர்க்கும் இந்துத்துவா ஒழிந்திருக்கவேண்டுமல்லவா! ஏன் ஒழியவில்லை? நிறைவான அன்பு கிறிஸ்தவத்தின்மூலம் வெளிப்படவில்லை என்பதே ஒற்றைப் பதில்.
எந்த மதவாதிகள் சாதி உணர்வு உடையவராக இருந்தாலும் நம்மால் புரிந்துகொள்ளலாம். ஆனால், அன்பே உருவான *இயேசுநாதர்* என்னும் உலக மீட்பரை கடவுளாக வணங்கும் கிறிஸ்தவர்களே சாதி உணர்வாளர்களாக இருப்பதை யாரால்தான் புரிந்துகொள்ளஇயலும்?
_*சத்தியத்தை அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான் 8:32)*_,
_*குமாரன் (இயேசு கிறிஸ்து) உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் (யோவான் 8:36)*_,
_*கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலை உண்டு (2கொரிந்தியர் 3:17)*_
என்ற வசனங்களை மேற்கோள் காட்டி *நற்செய்தி கூட்டங்கள், பேரின்ப பெருவிழாக்கள், சமாதான பெருவிழாக்களில்* பலமணி நேரம் பிரசங்கம் செய்யும் போதகர்கள் நம்மிடையே பலர் உண்டு. _"இயேசு கிறிஸ்து பாவத்திலிருந்து, சாபத்திலிருந்து, நோய்களிலிருந்து விடுதலையை தருகிறார்"_ என்று பல மேடைகளில் பேசப்பட்டு நான் என் சொந்த காதுகளால் கேட்டிருக்கிறேன். ஏதோ பிரமாண்டமான விடுதலையை கிறிஸ்தவர்கள் உறுதியளிக்கிறார்களே! என்று எண்ணி நமது கூடுகை அழைப்பை மதித்து, பலர் கிறிஸ்தவ கூட்டங்களில் ஆர்வமுடன் பங்கெடுக்கிறார்கள்; பாடல்களை கேட்கிறார்கள், நடனங்களை காண்கிறார்கள். போதனைகளை கேட்கிறார்கள். ஆனால், தங்கள் மனதை அரித்துக்கொண்டிருக்கும் சாதி அடிமைத்தனத்திலிருந்து விடுதலை தரும் வீரியமுள்ள வார்த்தைகள் கிறிஸ்தவர்களால் பேசப்படவில்லையே என்னும் விரக்தியிலேயே பலர் ஏமாற்றத்தோடு திரும்புகின்றனர். விரக்தியின் உச்சக்கட்டத்தில் பலர் கடவுளே இல்லை என்னும் பரிதாப முடிவுக்கே வந்துவிட்டனர்.
_"பாவம் செய்யக்கூடாது"_ என்று கிறிஸ்தவ அறிஞர்கள் அடிக்கடி பேசி மக்கள் கேள்விப்படுகிறார்கள். பாவம் என்றால் என்ன? செய்யத்தகாததை செய்வதும், செய்யவேண்டியவற்றை செய்யாதிருப்பதும்தானே பாவம்! பிறருக்கு தீங்கு இழைப்பதெல்லாம் பாவம் அல்லவா! கடவுளின் சாயலாக படைக்கப்பட்ட சகமனிதனை *கீழ்சாதி, அந்நியசாதி* என்று புறக்கணிப்பது பெரும்பாவம் இல்லையா! பிறப்பின் அடிப்படையில் ஒருவரை அவமதிப்பது பெரும்பாதகமல்லவா!
ஒரு மனிதனுடைய பிறப்புக்கு காரணம் அவரல்ல. இந்துத்துவாவால் அடிமைப்படுத்தப்பட்ட ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை பிறப்பதை தவறு என்று சொல்லமுடியுமா? ஒரு மனிதன் ஏழையாக பிறந்ததற்கோ, கறுப்பான தோலோடு பிறந்ததற்கோ அவர் பொறுப்பேற்கமுடியுமா?
சாதிப் பாகுபாட்டு சிந்தையை பாவங்களின் பட்டியலில் கடவுள் சேர்க்கவில்லையா? _*பிரிவினைகள், மார்க்கபேதங்கள் (கலாத்தியர் 5:20)*_ இவையெல்லாம் சாத்தானால் தூண்டப்படுபவை அல்லவா!
_"இயேசு கிறிஸ்து என் நோய்களை குணமாக்கினார்; வறுமையிலிருந்து, கடன்களிலிருந்து விடுவித்தார்; குடும்ப பிரிவினையிலிருந்து காத்தார்; தோல்வியிலிருந்து தூக்கினார்; தற்கொலை சிந்தையிலிருந்து இரட்சித்தார்; கொலை வெறியிலிருந்து விடுவித்தார்; குடிவெறியிலிருந்து நிவாரணம் தந்தார்"_ என்று சாட்சி சொல்வோர் நம்மிடையே பலர் உண்டு. அதற்காக இறைவனுக்கு உள்ளம் கனிந்து நன்றி செலுத்துகிறேன். ஆனால், எனக்கு அறிவு தெரிந்தநாள்முதல் _"சாதியம் என்னும் முக்கியமான உளவியல் பிரச்சனைக்கு இயேசு கிறிஸ்துவால் விடுதலை தரமுடியும்"_ என்று யாரும் எங்கும் பிரசங்கம் செய்து நான் பார்த்ததுமில்லை. _"நான் சாதி உணர்வு உடையவனாக இருந்தேன்; இயேசு கிறிஸ்து சாதி உணர்விலிருந்து என்னை விடுவித்தார்"_ என்று யாரும் அறிக்கை விடுத்து நான் கேட்டதுமில்லை. அப்படியானால் இந்த முக்கியமான ஆன்மீக பிரச்சனைக்கு தீர்வுகாணும் வலிமை உலக மீட்பர் இயேசு கிறிஸ்துவுக்கு இல்லையா? என்னும் கேள்வி சாதியால் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் மேலோங்குகிறது.
ஒருமுறை ஒரு இந்து சகோதரன் கிறிஸ்தவ நற்செய்தியாளர் ஒருவரை நோக்கி, _"கிறிஸ்தவர்கள் சாதி வெறியர்களாக இருக்கிறார்களே சார்! பிள்ளையாரை கும்பிடும் எங்களிடம் இல்லாத ஒரு சிறப்பான விடயம் இயேசுவை வணங்கும் உங்களிடம்தான் இருக்கிறது என்று ஏதாவது ஒரு விடயத்தை சொல்லுங்கள்"_ என்று சாதாரணமாக கேட்டார். உடனே நற்செய்தியாளர் அவரைப் பார்த்து, _"நீங்க கிறிஸ்தவர்களைப் பார்க்காதீங்க சார்; கிறிஸ்துவைப் பாருங்க"_ என்று இவர் சொல்ல, _"செத்துப்போன காமராஜர் நல்லவர் ஆனதுனால, அவர் சார்ந்திருந்த இத்துப்போன கட்சிக்கு ஓட்டுபோட சொல்றீங்களா சார்? இயேசுநாதர் நல்லவராக வாழ்ந்தார், நல்ல போதனைகளை சொன்னார் என்பதற்காக சாதிவெறிபிடித்த இந்த போலிக் கிறிஸ்தவத்தில் என்னை சேர்த்துவிட பார்க்கிறீர்களே சார்! இது உங்களுக்கு அநியாயமாக தெரியவில்லையா? மதம் மாறுவதால் எனக்குள் என்ன மாற்றம் உருவாகப் போகிறது? இந்துக்களிடம் இருக்கும் சாதிவெறி கொஞ்சம்கூட குறையாமல் உங்களிடம் இருக்கிறது! விகிதாச்சாரப்படி வரதட்சணை கொடுமை வழக்குகளை கிறிஸ்தவர்கள் பதிவு செய்யும் அளவுக்கு இந்துக்கள் பதிவு செய்வதில்லையே சார்! உங்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறதென்று எங்களை மதமாற்றம் செய்ய வந்திருக்கிறீர்கள்? முதலில் உங்களை சரி செய்தபின்தானே பிறரை மாற்ற முயற்சி செய்யவேண்டும்!"_ என்று கேட்டிருக்கிறார்.
அவர் கேட்ட கேள்வி எனக்கு அர்த்தமற்றதாக தெரியவில்லை. ஏனெனில், நம்மை ஏற்றுக்கொள்பவர்கள்தான் நம் கடவுளை ஏற்றுக்கொள்வார்கள் (மத்தேயு 10:40) என்றுதான் கிறிஸ்தவர்கள் போற்றும் பைபிளும் சொல்கிறது. *நமது கண்ணிலுள்ள மரத்துண்டை நீக்கியபின்தானே பிறருடைய கண்ணிலுள்ள தூசியை எடுக்கவேண்டும்! (மத்தேயு 7:3-5).* அருவருக்கத்தக்க முடைநாற்றமெடுக்கும் பண்பாடுகளோடு நாமே புறக்கணிக்கப்பட்டு கிடக்கும்போது நம் மார்க்கம் புறக்கணிக்கப்படுவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? சமத்துவம் என்பது மேன்மையானது. ஏற்றத்தாழ்வு என்பது இழிவானது அல்லவா! *கிறிஸ்தவர்களே ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கும்போது இந்துக்கள் கிறிஸ்தவர்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது அநியாயமல்லவா?*
நித்தியானந்தா என்ற இந்துத்துவ போதகர் இந்துத்துவ கொள்கைப்படி திருவண்ணாமலையிலுள்ள *"முதலியார்"* என்னும் சாதியில் பிறந்தவர். ஆனால் அவர் தன் பெயரை குறிப்பிடும்போது *'நித்தியானந்தா முதலியார்'* என்று எங்குமே எழுதி நான் பார்த்ததில்லை. ஆனால், ஒரு கிறிஸ்தவ போதகர் *'பத்மா முதலியார்'* என்று எழுதுகிறார். இதை பார்க்கும்போது கிறிஸ்தவ போதகர்கள் இந்துத்துவ சாமியார்களைவிட சாதி உணர்வு அதிகமாக உடையவர்கள் என்றல்லவா தோன்றுகிறது!
கிறிஸ்தவ திருச்சபையிலுள்ள ஒரு பையனுக்கு அதே கிறிஸ்தவ போதனையை பின்பற்றும் ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்யும்போது, சபைக்குள் இருக்கும் சாதி உணர்வுள்ள 'பக்த சிரோமணிகள்', பையன் *வேறுசாதி* என்று கூறி ஈவு இரக்கமின்றி அந்த திருமணத்தை தடை செய்துவிடுகிறார்கள். இதில் பெரிய மனவேதனை என்னவென்றால் அந்த *போதகரே* இந்த பாகுபாட்டு பிரிவினைகளுக்கு உடந்தையாக இருக்கிறார். உண்மையான கடவுளை வணங்கும் மக்கள் அனைவரும் ஒரே தந்தையின் பிள்ளைகளாக, ஒற்றுமையாக இருந்தால்தானே பிறர் நம்மை மதிப்பார்கள்! அன்பின் மார்க்கத்தாருக்குள்ளேயே இப்படி சாதி பேதம் இருந்தால், இந்த மார்க்கத்தை அறிவார்ந்த நடுநிலை மக்கள்கூட மதிக்கமாட்டார்களே! கடவுள் உண்டா இல்லையா என்று தெரியாத ஒரு இளைஞனிடம் இருக்கும் மனமுதிர்ச்சிகூட வேதாகம கல்லூரிகளை நடத்தும் 'மறைநூலை கரைத்துக் குடித்த' கிறிஸ்தவ வேதபண்டிதர்களிடமே இல்லையே என்று பிறர் குறை சொல்லும் அளவுக்கு கிறிஸ்தவம் சாதி சாக்கடைக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை. அதாவது, கடவுளைப் பற்றி தெரியாதவர்களிடம் இருக்கும் அடிப்படை மனிதநேயம்கூட பெரும்பான்மையான கிறிஸ்தவர்களிடம் இல்லை என்று சொல்கிறேன். கிறிஸ்தவர்கள் சாதி பார்த்து திருமணம் செய்வதால், இந்துத்துவா விதைத்த சாதி என்னும் நச்சுச்செடியை உலக இரட்சகராலேயே அழிக்க முடியாது என்ற கருத்து மக்களிடையே பரவி, கிறிஸ்தவத்தைப் பற்றிய வெறுப்பு அதிகமாகிவிட்டது.
பெரும்பான்மையான கிறிஸ்தவ 'போதகர்களே' சாதி உணர்வு உடையவர்களாக இருப்பதனால் அவர்களைச் சார்ந்த கிறிஸ்தவர்கள் 'சாதி உணர்வு தவறல்ல' என்று நினைத்து, குற்ற மனசாட்சியே இல்லாமல் அதைக் கடைபிடிக்கிறார்கள். ஆனால், இயேசு கிறிஸ்து சொல்கிறார், _*"இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில், அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே. (மத்தேயு 7:13,14).*_ எனவே, பெரும்பான்மையானவர்கள் சொல்கிறார்கள் என்பதனால் அது சரியாகத்தான் இருக்கும் என்று உறுதிசெய்யமுடியாது.
இஸ்ரயேல் நாட்டிலே ஆயிரக்கணக்கில் *வேதபாரகர்களும் ஆசாரியர்களும்* வலம்வரும்போது இயேசு கிறிஸ்து இஸ்ரயேல் மக்களைப் பார்த்து, *ஆயனற்ற ஆடுகள்* என்று அழைத்தார். அதுபோலத்தான் இன்றும் நம் நாட்டு பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் *ஆயனற்ற ஆடுகளாகத்* தான் இருக்கிறார்கள்.
கிறிஸ்தவர்களுக்குள் சாதியே இல்லை என்று அண்டப்புளுகை அள்ளிக்கொட்டும் இமாலயப் பொய்யர்களும் கிறிஸ்தவர்களிடையே உண்டு. செய்தித்தாளில் *மணமக்கள் தேவை* என்னும் பகுதியில் *கிறிஸ்தவ நாடார் தேவை, கிறிஸ்தவ ஆதி திராவிடர் தேவை, கிறிஸ்தவ வெள்ளாளர் தேவை* என்று மொத்த உலக மக்களும் பார்க்கும்படி அசிங்கமாக விளம்பரம் செய்கிறார்கள் 'இந்துத்துவ சாதிக் கொள்கையைக் கடைபிடிக்கும் கிறிஸ்தவர்கள்'. கிறிஸ்தவர்களுக்குள் சாதி இல்லையானால் ஏன் இப்படி விளம்பரம் செய்யவேண்டும்?
கிறிஸ்தவ திருமண தகவல் மையங்களில் ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி கோப்புகள் (Files) வைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்களுக்குள் சாதி இல்லையானால் ஏன் இப்படி பிரித்து வைக்கவேண்டும்?
2018-ம் ஆண்டு மே மாதம் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்திலுள்ள குமாரநல்லூர் என்னும் ஊரிலுள்ள கெவின் ஜோசப் என்னும் 'தாழ்த்தப்பட்ட' வகுப்பைச் சார்ந்த 23 வயது இளைஞன் 'உயர்சாதி' என்று அழைக்கப்படும் நீனு என்ற கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்தார். இந்த திருமணத்தை பெண்ணின் பெற்றோர் விரும்பாததால் மணமகனை ஈவு இரக்கமின்றி கொலை செய்துவிட்டனர். கிறிஸ்தவர்களுக்குள் சாதி இல்லையானால் ஏன் இப்படி சாதி ஆணவக் கொலை நடக்கிறது?
திருநெல்வேலியிலுள்ள *நாஞ்சாங்குளம்* என்ற ஊரில் ஒரே தெருவில் இரண்டு CSI சபைகள் இருக்கின்றன. ஒன்று *நாடாருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.*
திருநெல்வேலியிலுள்ள *டக்கரம்மாள்புரம்* என்ற ஊரில் ஒரே தெருவில் இரண்டு CSI சபைகள் இருக்கின்றன. ஒன்று *நாடாருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.*
சிவகாசியிலுள்ள *சாட்சியாபுரம்* என்ற ஊரில் ஒரே தெருவில் இரண்டு CSI சபைகள் இருக்கின்றன. ஒன்று *நாடாருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.*
மதுரையில் திருமங்கலம் என்ற ஒரே ஊரில் இரண்டு CSI சபைகள் உள்ளன. ஒன்று *நாடாருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.*
ஈரோடு மாவட்டம் *கோபி செட்டிப்பாளையத்தில்* ஒன்றாய் இருந்த CSI சபை *நாடார் சபை* என்றும் *தாழ்த்தப்பட்டோர் சபை* என்றும் இரண்டாக பிரிந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் *சத்தியமங்கலத்தில்* ஒன்றாய் இருந்த CSI சபை *நாடார் சபை* என்றும் *தாழ்த்தப்பட்டோர் சபை* என்றும் இரண்டாக பிரிந்துள்ளது.
*திருப்பூரில்* ஒன்றாய் இருந்த CSI சபை *நாடார் சபை* என்றும் *தாழ்த்தப்பட்டோர் சபை* என்றும் இரண்டாக பிரிந்துள்ளது.
உடுமலைப்பேட்டை என்ற ஒரே ஊரில் இரண்டு CSI சபைகள் உள்ளன. ஒன்று *நாடாருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.*
பொள்ளாச்சி என்ற ஒரே ஊரில் இரண்டு CSI சபைகள் உள்ளன. ஒன்று *நாடாருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.*
கிறிஸ்தவர்களுக்குள் சாதிப்பிரிவினைகள் இல்லையானால், ஏன் சபைகள் இப்படி சாதி அடிப்படையில் பிரிந்துகிடக்கவேண்டும்? இது சாதி உணர்வையும் தாண்டி தீண்டாமைக் கொடுமை அல்லவா! இந்திய கிறிஸ்தவர்களைப் பற்றி முழுக்க தெரியாமல் சிலர் *'கிறிஸ்தவத்தில் சாதி உண்டு; ஆனால் தீண்டாமை இல்லை'* என்று சொல்கிறார்கள். நாங்கள் 'நாடார்கள்'; எங்கள் கோயிலுக்குள் 'தலித் கிறிஸ்தவர்கள்' வரக்கூடாது என்று புறக்கணித்து இழிவுபடுத்துவது தீண்டாமையல்லவா!
பெரும்பான்மையான CSI, CNI, Lutheran, Catholic, Methodist, Adventist, Baptist, AG சபைகளின் ஊழியர்கள் இந்துத்துவ சாதி உணர்வு உடையவர்களாகத்தான் 'ஊழியம்' செய்கிறார்கள். அவர்களுடைய பெயர்களுக்குமுன் *"Reverend (பயப்படத்தக்க, ஆழமான மரியாதைக்குரிய)"* என்னும் பட்டப் பெயரை அவர்களே எழுதுகிறார்கள். அப்படி சொன்னால்தான் மக்கள் கொஞ்சமாவது மதிக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், சாதி உணர்வோடு வாழும் ஒருவருக்கு சமூக நலம் விரும்பிகளிடம் எப்படி ஆழமான மரியாதை கிடைக்கும்? அவரை ஒரு ஆன்மீக தலைவராக ஆத்மார்த்தமாக எப்படி மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்? இவர்கள் வெள்ளை அங்கி அணிவதால்மட்டும் எல்லாரும் இவர்களை *ஆன்மீக முன்னோடிகள்* என்று நம்பிவிடுவார்களா?
சில ஊர்களில் ஒரே ஆலயத்தில் தலித்துகளுக்கும் மற்றவர்களுக்கும் வெவ்வேறு நேரங்களில் ஆராதனை நடக்கிறது. கிறிஸ்தவர்களுக்குள் சாதிப்பிரிவினைகள் இல்லையானால், தொழுகை நேரங்களில் ஏன் பாகுபாடு காட்டவேண்டும்?
தாழ்த்தப்பட்ட இறையியல் கல்வி மாணவர்கள் தங்கள் இறைப்பணிப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தபின்னும் அவர்கள் இறைப்பணியாளர்களாக நியமிக்கப்படுவதில்லை. மறை மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் பள்ளிகள், கல்லூரிகளில் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்த தாழ்த்தப்பட்டவர்கள் அந்த வேலைக்கு தகுதியுள்ளவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு மூப்பு முன்னுரிமை (Seniority) இருந்தாலும் வேலை நியமனங்களில் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றனர். பேராயர் தன் சாதியை சார்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகமாக கொடுக்கிறார் என்று பாதிக்கப்பட்ட மக்கள் குமுறுகிறார்கள். ஆலய வளாகங்களில் கட்டி வாடகைக்கு விடப்பட்ட கடைகளை சாதி அடிப்படையில்தான் வாடகைக்கு விடுகிறார்கள். எடுத்துக்காட்டாக 'நாடார்கள்' தங்கள் சாதி இந்து நாடார்களுக்கு கொடுத்தாலும் 'தலித்' கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கமாட்டார்கள். கிறிஸ்தவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது அந்த திருமண்டலத்திலுள்ள ஆதிக்க சாதியினருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சிலவேளைகளில் ஆலயத்துக்குள் சாதி அடிப்படையில் கைகலப்பு நடக்கிறது. சில நேரங்களில் அந்த சண்டை முற்றி நீதிமன்ற வழக்கில் முடிகிறது. கிறிஸ்தவ போதகர்களுக்கிடையேயான பிரச்சனைகளை மாற்று மத நம்பிக்கையுள்ள நீதிபதிகள் தீர்த்துவைக்கின்ற கேவலமான வேடிக்கையை சாதாரணமாக காணலாம். இதில் தன்மானமில்லாத போதகர்களுக்கு கொஞ்சம்கூட வெட்கமே இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. கிறிஸ்தவர்களுக்குள் சாதிப்பிரிவினைகள் இல்லையானால், கிறிஸ்தவம் ஏன் இப்படி ஒரு கேவலமான நிலைமைக்கு தள்ளப்படவேண்டும்?
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கிறிஸ்தவ வாலிபர்கள் அவர்களைவிட வயதுக்குமூத்த 'தாழ்த்தப்பட்ட' கிறிஸ்தவ பெரியவர்களை மரியாதையே இல்லாமல் பெயர் சொல்லி அழைக்கும் சமூக கொடுமையை இன்றும் தமிழ்நாட்டில் காணமுடிகிறது.
தேர்தல் நேரங்களில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதியில், கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை கிறிஸ்தவராக மட்டும் பார்த்து நிறுத்துவதில்லை. பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் என்ன ஜாதியோ அந்த ஜாதிக்காரரே வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். அதே தொகுதியில் வேற்றுஜாதியை சேர்ந்த ஒரு கிறிஸ்தவரையும், அவருக்கு எதிராக அந்த ஜாதியை சேர்ந்த இந்து வேட்பாளரையும் நிறுத்தினால், பரிதாபமாக கிறிஸ்தவ வேட்பாளர் கிறிஸ்தவர்களாலேயே தோற்கடிக்கப்படுகிறார். அவ்வளவுதூரம் கிறிஸ்தவர்கள் சாதிவெறி உடையவர்களாக இருக்கிறார்கள். இப்படியிருக்க, கிறிஸ்தவர்களுக்குள் சாதிப்பிரிவினைகள் இல்லை என்று பெருமை பேசுவது முழுப் பூசணிக்காயை தட்டுச்சோற்றுக்குள் மறைக்க முற்படுவது போன்றதல்லவா!
_சூத்திரனுக்கொரு நீதி, தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி, என்று சாத்திரம் சொல்லிடுமாயின்
அது சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்”_ என்றும்
_"சாதிகள் இல்லையடி பாப்பா; குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"_ என்றும் உயர்சாதி என்று சொல்லப்படும் *'பிராமண'* குடும்பத்தில் பிறந்த *சுப்பிரமணிய பாரதியார்* சொன்னார். உண்மையான கடவுளைப்பற்றி தெரியாமல் *'பத்திரகாளி'* என்னும் ஒரு விக்கிரகத்தை வணங்கிய, ஒரு இந்துத்துவ சிந்தனையாளர் சாதி ஏற்றத்தாழ்வு கொள்கையை *'பாவம்'* என்று குறிப்பிடுகிறார். இயேசுவை அறியாத *ஒளவை* பெருந்தகை 12-ம் நூற்றாண்டிலேயே, "சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால் நீதிவழுவா நெறிமுறையின் மேதினியில் இட்டார் பெரியார், இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி" என்று புரட்சி முழக்கமிட்டார். ஆனால், கிறிஸ்தவ பாதிரியார்களோ கிறிஸ்தவத்துக்கு சம்பந்தமே இல்லாத இந்துத்துவ சாதிவெறியோடு அலைகிறார்கள். கிறிஸ்தவர்களின் இந்த பிற்போக்குத்தனம் இந்த நாட்டிலுள்ள எல்லா கிறிஸ்தவ எதிர்ப்பாளர்களுக்கும் தெரியும்.
கிறிஸ்தவர்கள் பலர் தங்கள் பெயருக்குப்பின் இந்துத்துவ சாதியின் பெயரை எழுதுகிறார்கள். *மோசஸ் நாடார், ராபர்ட் தேவர், அந்தோணி முதலியார், சேவியர் செட்டியார்* என்று கூச்சமில்லாமல் குறிப்பிடுகிறார்கள். பல கிறிஸ்தவர்களின் கல்லறைகளில்கூட புதைக்கப்பட்டவரின் சாதி பெயரும் சேர்த்தே பொறிக்கப்பட்டுள்ளது. உயிரோடிருப்பவரை மட்டுமல்ல இறந்தவரையும் இந்த சாதிப்பிசாசு விட்டுவைக்கவில்லையே!
சில ஊர்களில் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு தனி கல்லறைத் தோட்டமும், பிறருக்கு தனி கல்லறைத் தோட்டமும் 'அருட்பணியாளர்கள்' என்று அழைக்கப்படுபவர்களால் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்களுக்குள் சாதிப்பிரிவினைகள் இல்லையானால், ஏன் கல்லறைகள் சாதி அடிப்படையில் பிரிந்துகிடக்கவேண்டும்? இந்த கொடுமையான கோமாளித்தனத்துக்கு பொதுநிலையினரை மட்டும் குறை சொல்வதில் பயனில்லை. பல்லாண்டுகள் இறையியல் படித்த பாதிரிகள்தான் பொறுப்பேற்கவேண்டும். அவர்களால் திருச்சபையோரை கட்டுப்படுத்தமுடியாவிட்டால் தங்களை *'பயபக்திக்குரிய போதகர்கள்'* என்று அவர்கள் *தங்களை தாங்களே* அழைத்துக்கொள்வதில் அர்த்தமில்லை.
இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் ஊழியக்காரர்களே தங்கள் பெயருக்குப் பின் சாதிப் பெயரை எழுதுகிறார்கள். இது இந்தியாவில் மட்டுமல்ல; இந்திய கிறிஸ்தவர்கள் எந்தெந்த நாடுகளில் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இந்த மனநோய் பரவியிருக்கிறது.
சில கிறிஸ்தவர்கள் சாதி உணர்வு இல்லாத கண்ணியவான்களைப் போல பிற கிறிஸ்தவர்களிடம் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் சாதிப் பேய்க்கு அடிமையானவர்கள் என்பதை சில சந்தர்ப்பங்கள் அப்பட்டமாக காட்டிக்கொடுத்துவிடுகின்றன.
கிறிஸ்தவர்கள் *கிறிஸ்தவ நாடார் சங்கம், கிறிஸ்தவ முதலியார் முன்னேற்ற சங்கம், கிறிஸ்தவ பறையர் பேரவை, கிறிஸ்தவ வெள்ளாளர் பேரவை, தலித் கிறிஸ்தவ பேரவை, கிறிஸ்தவ வன்னியர் நல சங்கம்* என்று சாதி சங்கங்களை தொடங்கி நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் 'இரட்சிக்கப்பட்டேன்' என்று சொல்லிக்கொள்பவர்கள்தான் அந்த சங்கங்களில் நிர்வாகிகளாக இருக்கிறார்கள். எதிலிருந்து இரட்சிக்கப்பட்டார்களோ தெரியவில்லை. கிறிஸ்தவத்தின் நிலை எவ்வளவு அசிங்கமாக இருக்கிறது பாருங்கள்!
கிறிஸ்தவர்களுக்குள் சாதிப்பிரிவினைகள் இல்லையானால், ஏன் கிறிஸ்தவர்கள் சாதி சங்கங்களை தொடங்கி நடத்தவேண்டும்?
விழுப்புரம் மாவட்டம் இறையூர் என்னும் கிராமத்திலுள்ள கத்தோலிக்க சபையில் நடந்த சாதிச் சண்டையில் காவல் துறையினர் துப்பாக்கிசூடு நடத்தி பலர் உயிர் இழந்துள்ளனர். அவர்கள் இயேசுவுக்காக தங்கள் உயிரைக் கொடுக்கவில்லை. நற்செய்தி அறிவித்ததற்காக கொலை செய்யப்பட்ட இரத்த சாட்சிகளல்ல அவர்கள். அசிங்கமான இந்துத்துவ சாதிக்காக தங்கள் உயிரைக் கொடுத்த துர்பாக்கியசாலிகள். *'தாழ்த்தப்பட்டோர்' என்று தங்களை அழைத்துக்கொள்வோரின் பிணத்தை 'வன்னியர்' என்று தங்களை அழைத்துக்கொள்வோருடைய வீதி வழியாக கொண்டுபோகக்கூடாது; தேர்பவனி தாழ்த்தப்பட்டவர்களின் தெருவில் போகக்கூடாது* என்று தடைவிதிக்கும் அளவுக்கு உச்சக்கட்ட சாதிவெறி உடையவர்களாக கிறிஸ்தவர்கள் அந்த ஊரில் இருக்கிறார்கள்.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த தச்சூர் என்னும் கிராமத்திலுள்ள கத்தோலிக்க சபையிலுள்ள 'தலித்துகள்' என்று தங்களை அழைத்துக்கொள்வோர் இறந்தால் அவர்களை புதைப்பதற்கு மயானபூமி, 'நாயுடு' என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஆதிக்கசாதியினரால் மறுக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து குரல் கொடுத்த 'தாழ்த்தப்பட்டவர்' என்று தன்னை அழைத்துக்கொள்ளும் *இராஜேந்திரன்* என்பவர் ஆதிக்க சாதி கிறிஸ்தவர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். கிறிஸ்தவர்களாகிய நாம் *இந்துத்துவ ஜாதிப்பேயிடம் விலைபோனவர்கள்* என்னும் அசிங்கமான உண்மை உலகுக்கே தெரிந்துவிட்டது.
கத்தோலிக்க பாதிரியார்கள் பல்லாண்டுகள் மறைக்கல்விப் பள்ளியில் (Seminary) கற்றுத்தேறித்தான் 'பாதிரியார்' பட்டத்தை பெறுகிறார்கள். அவர்களுடைய ஆன்மீக பணிக்கு குடும்ப உறவு தடையில்லாமல் இருப்பதற்காக இல்வாழ்க்கையை துறந்து திருமணம் செய்யாமல் இந்த பொறுப்புக்கு வருகிறார்கள். ஆனால், பெரும்பான்மையான பாதிரியார்கள் இந்த சாதிப்பிசாசிடமிருந்து விடுதலை இல்லாமலேயே காலம் தள்ளுகிறார்கள். அவர்களது வெளிப்புறம் வெண்மையான அங்கியால் போர்த்தப்பட்டிருந்தாலும் உள்ளே சாதி அழுக்கோடுதான் 'அருட்பணி' செய்கிறார்கள். இயேசு கிறிஸ்து மனித அவதாரமாக பிறந்ததன் சாராம்சத்தையே கிறிஸ்தவர்கள் நாம் தொலைத்துவிட்டோமே! மறைநூலில் எழுதியுள்ளவாறு *கிறிஸ்தவர்களால் கடவுளின் பெயர் பிற இனத்தாரிடையே இகழப்படுகின்றதே!(உரோமையர் 2:24)*
தனக்கு தனது சாதியில் வரன் கிடைக்காததால் திருமணமே ஆகாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் பல பெண்களின் பெற்றோர் *'பூரண பெந்தெகோஸ்தே'* பாஸ்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகர்கோயிலில் ஒரு பாஸ்டருக்கு அவருடைய சாதியில் பெண் கிடைக்காததால், எனக்குத் தெரிந்து அவரது 42 வயது வரை அவருக்கு பெண் தேடிக்கொண்டிருந்தார். இது எவ்வளவு அவமானமாக இருக்கிறது!
_"நீ சாதிமாறி திருமணம் செய்தால் நான் தற்கொலை செய்து செத்துவிடுவேன்"_ என்று மிரட்டும் பெற்றோர் கிறிஸ்தவர்களில் தாராளமுண்டு. சில கிறிஸ்தவர்கள் தங்கள் சாதியில் பெண் கிடைக்கவேண்டுமென்று உபவாச ஜெபம் செய்கிறார்கள். அவர்களது ஆன்மீக முதிர்ச்சியைப் பார்த்தீர்களா?
சாதி என்னும் விஷத்தை உள்ளே வைத்துக்கொண்டே, நகைகளை கழட்டி வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துக்கொண்டு, வெள்ளை நிற ஆடை அணிந்துவிடுவதால் பிறர் நம்மை *புனிதமானவர்கள்* என்று நம்பிவிடுவார்கள் என்று நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், சாதி விஷயத்தில் நாம் *சாயத்தொட்டிக்குள் விழுந்த நரி* போல் அல்லவா வாழ்கிறோம்! இப்படிப்பட்ட வேடதாரிகளைப் பற்றி ஆண்டவர் கூறுகிறார், _*"குருட்டு வழிகாட்டிகளே! நீங்கள் பருகும்போது கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள். ஆனால், ஒட்டகத்தையோ விழுங்கிவிடுகிறீர்கள். "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால், அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருட்களாலும், தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள். குருட்டுப் பரிசேயரே, முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது, அதன் வெளிப்புறமும் தூய்மையாகும். வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். அவை புறம்பே அழகாகத் தோற்றமளிக்கின்றன; அவற்றின் உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும் எல்லாவகையான அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன. அவ்வாறே நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால், உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள். (மத்தேயு 23:24-28)*_
நான் பிறந்து வளர்ந்த குமரி மாவட்டம், தமிழ்நாட்டிலேயே கல்வியறிவு உடைய மக்கள் அதிக சதவீதம் வாழும் மாவட்டம். ஆனால், ஏறத்தாழ எல்லா படிப்பறிவுடைய பாஸ்டர்களும் இந்துத்துவ சாதி பார்த்துதான் திருமணம் செய்கிறார்கள். பலமணி நேரம் அந்நிய பாஷையில் 'முழங்கால் யுத்தம்' செய்யும் ஜெபவீரர்களும், ஆத்துமாக்களை ஆதாயம் செய்வதற்காக அற்புதப் பெருவிழாக்களில் பேசும் விசேஷ வரம் பெற்ற பராக்கிரமசாலிகளும், 'ஆவிக்குரிய வைராக்கிய வாஞ்சையுடைய பெந்தேகோஸ்தே அனுபவசாலிகளும்'கூட இந்துத்துவ சாதி என்னும் மனநோயால் பீடிக்கப்பட்டுதான் கிடக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை.
பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் இந்துத்துவ சாதியத்தை தங்கள் வாழ்வியல் கொள்கையாக ஏற்றுக்கொண்டு, சாதி அடிப்படையில் திருமணம் செய்வதால், இந்துத்துவம் விதைத்த சாதி என்னும் நச்சுச்செடியை *உலக இரட்சகரால்கூட அழிக்க முடியாது* என்ற அசிங்கமான கருத்து மக்களிடையே பரவி, கிறிஸ்தவத்தைப் பற்றிய *வெறுப்பு ஏற்கெனவே அதிகமாகிவிட்டது.* குறிப்பாக இந்துத்துவத்தால் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் தங்கள் சாதியால் மேல்தட்டு மக்களால் அதிகமாக பாதிக்கப்பட்டாலும் இந்துத்துவ சாதிச் சிறைச்சாலையிலிருந்து வெளியேறமுடியாமல் தவிப்பதன் காரணம் என்ன? கிறிஸ்தவத்துக்குள்ளும் இந்துத்துவ சாதியத்தின் ஆதிக்கம் இருப்பதே அதன் காரணம் ஆகும்.
ஒருமுறை திருநெல்வேலியில் *நாடார்* என்னும் சாதி உணர்வால் பீடிக்கப்பட்ட ஒரு 'சுவிசேஷ ஊழியர்' என்னுடன் பேசும்போது, _"சென்னை பேராயத்தில் இதுவரை ஒருமுறைகூட நாடார் ஜாதியை சார்ந்தவர்கள் பேராயர் பதவிக்கு வந்ததில்லை. சென்னை கிறிஸ்தவர்களின் சாதிவெறியை பார்த்தீர்களா அண்ணே?"_ என்றார். உடனே நான், _"அந்த பதவிக்கு வருபவர்களை *ஊழியக்காரர்களாக* பார்க்காமல் சாதி அடிப்படையில் பாகுபடுத்தியே பார்க்கிறீர்களே! அப்படிப் பார்த்தால் திருநெல்வேலி பேராயத்தில் ஒருமுறையாவது ஒரு தலித் பேராயராக பதவி ஏற்றிருக்கிறாரா?"_ என்று கேட்டேன். இயேசுவின் இரட்சிப்பை பிறருக்கு நற்செய்தியாக அறிவிக்கும் ஒரு 'ஊழியருக்குள்' இருக்கும் சாதி உணர்வைப் பாருங்கள்!பூமியிலே சாதி வெறியிலிருந்து மனம் திருந்தும் ஊழியர்களை முன்னிட்டு பரலோக இராஜ்ஜியத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் என்று நினைக்கிறேன்.
இந்துத்துவாவால் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களில் ஒரு சாதியார் மற்ற சாதியாரை ஏற்றுக்கொள்வதில்லை என்பது கொடுமையிலும் பெரிய கொடுமை. எடுத்துக்காட்டாக, *பள்ளர்கள்* என்று தங்களை அழைத்துக்கொள்பவர்கள் *பறையர்கள்* என்று தங்களை அழைத்துக்கொள்பவர்களை திருமணம் செய்வதில்லை. *பறையர்கள்* என்று தங்களை அழைத்துக்கொள்பவர்கள் *அருந்ததியர்கள்* என்று தங்களை அழைத்துக்கொள்பவர்களை திருமணம் செய்வதில்லை.
ஒருமுறை "ஆதி திராவிடர்" என்று தன்னை அழைத்துக்கொள்ளும் ஒருவர் என்னிடம், _"அண்ணா, நாடார்கள் சாதிவெறி உடையவர்கள்; என் மகனுக்கு ஒரு நாடாரிடம் போய் பெண் கேட்டால் தரமுடியாது என்று சொல்லிவிட்டார்"_ என்றார். உடனே நான், _"அவருக்கு சாதியத்தின் வரலாறு தெரியாது. 'சாதியம் தவறு' என்ற இறைவார்த்தைகள், விளக்கங்கள் தெரியாததால் அவர் சாதி உணர்வோடு இருக்கிறார். அவரை விடுங்கள். நீங்கள் சாதி உணர்வு அற்றவர் என்று நம்புகிறேன். உங்கள் மகளை 'அருந்ததியர்' என்று தன்னை அழைத்துக்கொள்ளும் ஒரு கிறிஸ்தவருக்கு கொடுக்கமுடியுமா?"_ என்று கேட்டேன். உடனே அவர், _"அருந்ததியர்களுக்கு என் மகளை எப்படி கொடுக்கமுடியும்?"_ என்றார். உடனே நான், _*"ஒருவர் தாம் விதைப்பதையே அறுவடை செய்வார் (கலாத்தியர் 6:7)._* நீங்கள் 'அருந்ததியரிடம்' விதைக்கும் வெறுப்பை 'நாடாரிடம்' அறுவடை செய்தீர்கள், *_பிறர் உங்களுக்கு என்ன செய்யவேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதையே நீங்கள் பிறருக்கு செய்யுங்கள்" (மத்தேயு 7:12)_* என்று இயேசுநாதர் தெளிவாக்கியிருக்கிறார். பிறர் உங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்பும் நீங்கள் பிறரை ஏற்றுக்கொள்ளவேண்டும் அல்லவா! அதுதானே நியாயம்! நீங்கள் யாரையும் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள்; எல்லாரும் உங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது அநியாயமல்லவா! சட்டம் எல்லாருக்கும் பொதுவானதல்லவா! _*இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். மத்தேயு 5:7)*_
" என்றேன்.
அருந்ததியர்கள் கொடிய சாதி கொடுமைகளை தங்கள் இந்துத்துவ மதத்தில் அனுபவித்தாலும், அவர்கள் கிறிஸ்தவத்துக்கு வராததும், வந்த சிலர் திரும்ப இந்துத்துவத்துக்கே போனதும் இந்த சாதிவெறிக் கிறிஸ்தவர்களின் புறக்கணிப்பால்தான் என்பது காலம் நமக்கு கற்றுக்கொடுத்திருக்கும் கசப்பான பாடம்.
அண்மையில் முனிசெல்வம் என்ற ஒரு அருமையான சகோதரனிடம் தொலைபேசியில் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. செங்கல்பட்டில் வாழும் அவர் ஒரு வழக்கறிஞராக பணியாற்றுகிறார். *தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி* என்ற இயக்கத்தில் தீவிரமாக செயலாற்றுகிறார். அவரிடம் நான் பேசும்பொழுது, _"சகோதரரே, தீண்டாமை ஒழிக்க முனைப்பாக இருக்கும் நீங்கள், தீண்டாமையை கற்பித்து, நடைமுறைப்படுத்தும் இந்துத்துவாவில் ஏன் இன்னும் இருக்கிறீர்கள்?"_ என்று கேட்டேன். உடனே அவர் மிகவும் மனத்தாழ்மையான குரலில், _"ஐயா, நான் கிறிஸ்தவத்திற்கு வந்தால், மற்ற கிறிஸ்தவர்கள் என்னை கிறிஸ்தவ தலித்தாகத்தான் கருதுவார்கள். எத்தனை நூற்றாண்டுகளானாலும் தாழ்த்தப்பட்டவன் என்ற பதவி என்னைவிட்டு அகலப்போவதில்லை. மேல்சாதி கிறிஸ்தவர்களால் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்கள் படும் பாடுகள் எங்கள் அமைப்புக்கு நன்றாக தெரியுமே ஐயா! மதமாற்றத்தால் எனக்குள் என்ன மாற்றம் உருவாகப் போகிறது? அதனால் தான் இந்துவாகவே தொடர்கிறேன்"_ என்றார். மனதிற்கு மிகுந்த வலி கொடுத்த இந்த உரையாடல், என் உயிருள்ளவரை நினைவில் இருக்கும் அளவிற்கு ஆழமாக என் மனதில் பதிந்துவிட்டது. கிறிஸ்தவத்தை வெளியே இருப்போர் எப்படி புரிந்து வைத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா சகோதரங்களே! _'உப்பில்லா பண்டம் குப்பையிலே'_ என்று நம் மூதாதையர்கள் சொன்னது எவ்வளவு உண்மையாக இருக்கிறது!
காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் இருக்கும்போது பைபிளை கருத்தூன்றி வாசித்ததில் இயேசு கிறிஸ்துவின் மலைப்பொழிவு அவரை மிகவும் கவர்ந்துள்ளது. இயேசு கிறிஸ்துவின் கொள்கையால் கவரப்பட்ட காந்தி ஒருநாள் வெள்ளையர்களுக்கென்று நியமிக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ ஆலயத்தில் நுழைய முற்பட்டபோது, வெள்ளையர்கள் தங்கள் இனவெறியால் காந்தியை ஈவு இரக்கமின்றி ஆலயத்திலிருந்து வெளியே துரத்திவிட்டார்கள்.
அதே நாட்டில் ஒருமுறை இரயிலில் பயணம் செய்ய காந்தி முயற்சி செய்தபோது, அந்த பெட்டி வெள்ளையர்களுக்கென்று நியமிக்கப்பட்டிருந்ததால், வெள்ளையர்கள் தங்கள் இனவெறியால் காந்தியின் உடைமைகளையும், காந்தியையும் வெளியேற்றிவிட்டார்கள். இதுதான் இயேசுபெருமான் கிறிஸ்தவர்களுக்கு கற்றுக்கொடுத்த பண்பாடா என்று காந்தி அன்று மனம் நொந்திருப்பார் அல்லவா!
ஒருமுறை இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு ஆன்மீகப்பணியாளர் ஸ்டேன்லி ஜோன்ஸ் என்பவர் காந்தியிடம், _"காந்தியாரே, நீங்கள் உங்கள் பேச்சில் அடிக்கடி இயேசு கிறிஸ்துவின் போதனைகளை மேற்கோள் காட்டுகிறீர்கள்; ஆனால், ஏன் நீங்கள் இன்னும் கிறிஸ்தவராக மாறவில்லை?"_ என்று கேட்டார். அதற்கு காந்தி, _"நான் உங்கள் கிறிஸ்துவை விரும்புகிறேன்; ஆனால், கிறிஸ்தவர்களை விரும்பமுடியவில்லை; ஏனெனில், கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவைப்போல இல்லை"_ என்றாராம். இப்படி கிறிஸ்தவர்கள் வரலாறு நெடுக தங்கள் இனவெறி, சாதிவெறியை வெளிப்படுத்தி கடவுளை கேவலப்படுத்தியிருக்கிறார்கள்.
ஆப்பிரிக்காவில் ஒரு நீக்ரோ மனிதர் கிறிஸ்துவின் மீட்பை ஏற்றுக்கொண்டார். கடவுளை வணங்க விரும்பி அருகிலிருந்த வெள்ளையர்களின் கோவிலுக்கு சென்றார். _"நீயெல்லாம் இங்கே வரக்கூடாது"_ என்று வெள்ளையர்கள் அவனை துரத்திவிட்டனர். அவன் வாசலுக்குமுன் நின்று தொழுகையை கவனித்துக் கொண்டிருந்தான். இதை கவனித்த பக்தர்கள் உடனே வாசலை மூடிவிட்டனர். உடனே இவர் சன்னல் வழியாக எட்டிப்பார்த்து நின்றார். உடனே சன்னலையும் அடைத்துவிட்டனர். அந்த நீக்ரோ மனிதர் கோவிலைச் சுற்றி சுற்றி வந்து, _"இயேசுவே, கோவிலின் கதவை திறந்தருளும்"_ என்று வேண்டினார். அவர் இப்படி கோவிலை சுற்றி வரும்போது அவருக்கு எதிர் திசையில் வேறொருவர் கோவிலைச் சுற்றி வருவதைக் கண்டான். அவர் இந்த மனிதனைப் பார்த்து, _"நீ ஏனப்பா கோவிலைச் சுற்றி வருகிறாய்?"_ என்று கேட்டார். அதற்கு நீக்ரோ மனிதன், _"ஐயா! நான் மீட்கப்பட்டதனால் கடவுளை வணங்க விரும்பி இந்த கோவிலுக்கு வந்தேன். நான் கறுப்பாக இருப்பதால் யாரும் என்னை உள்ளே விடவில்லை; கதவுகளையும் அடைத்து விட்டனர். அரை மணி நேரமாக கோவிலின் உள்ளே நுழைவதற்கு நான் போராடிக் கொண்டிருக்கிறேன்"_ என்றார். அந்த மனிதர் சொன்னார், _"நீ அரை மணி நேரமாகத்தான் போராடிக்கொண்டிருக்கிறாய். நான் 18 வருடங்களாக உள்ளே செல்லமுடியாமல் போராடிக்கொண்டிருக்கிறேன். என்னையே அவர்கள் உள்ளே விடவில்லை. நீ கறுப்பாகவும் இருந்தாலும் உன் உள்ளம் வெள்ளையாக இருக்கிறது. அவர்கள் தோல்தான் வெள்ளை. ஆனால், அவர்கள் உள்ளம் கறுப்பாக. இருக்கிறது"_ என்றார். ஆச்சரியப்பட்ட நீக்ரோ மனிதர், _"ஐயா! நீங்கள் யார்?"_ என்று கேட்டான். அவர் சொன்னார் _"நான்தான் இயேசு!"_ என்றார்.
"பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் *அன்பு, பாசம், தயவு, இரக்கம், சகோதரத்துவம், சமத்துவம்* என்பவற்றைப் பற்றி மேடையில் வாய்கிழிய பேசுவார்களேதவிர, நிஜவாழ்வில் கீரியும் பாம்பும் சண்டையிடுவதைப்போல பிரிவினைவாதிகளாக, ஜாதிவெறியோடு பிரிந்துகிடக்கும் வேடதாரிகள்தான்" என்று பிறர் நம் உண்மை நிலையை சமூக வலைதளங்களில் படம்பிடித்து காட்டுகிறார்கள்.
இத்தாலியிலிருந்து இந்தியாவுக்கு இறைப்பணி செய்யவந்த இராபர்ட் டி நோபிளி என்ற பாதிரியார், பிராமணர்களை கிறிஸ்தவத்துக்கு இழுக்க _'சாதியம் தவறு அல்ல'_ என்று போதித்து, ஆலயத்திற்குள் சாதி அடிப்படையில் மக்கள் உட்காரும் இடங்களை நிர்ணயித்தார். அதற்கென்று பிரிவுக் கைப்பிடிச்சுவர்களை எழுப்பினார். ஆதிக்க சாதியினர் உட்காரும் இடத்தைவிட தாழ்த்தப்பட்டவர் உட்காரும் இடம் சற்று தாழ்வாக அமைக்கப்பட்டது. பிராமணர்கள் சமைத்த உணவையே அவர் உண்டார். 'எப்படியாவது கொஞ்சம்பேரை மதமாற்றம் செய்துவிடவேண்டும்' என்ற இழிவான ஆசையால்தானே இப்படி நடந்துள்ளது!
சிலர் தங்களிடம் சாதிப் பாகுபாடுகளே இல்லை என்று சொல்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் ஆதாரம் என்னவென்றால், _"நான் வேலை செய்யும் இடத்தில் எல்லா சாதியினரிடமும் சகஜமாக பழகுகிறேன்; பேருந்தில் பயணம் செய்யும்போது சாதி பார்க்காமல் அமர்கிறேன்; வங்கியில் பணம் எடுக்க, ரேஷன் கடையில் பொருட்களை வாங்க வரிசையில் நிற்கும்போது நான் சாதி பார்ப்பதில்லை; ஆனால், திருமணத்தில் மட்டும்தான் சாதி பார்ப்பேன்"_ என்கிறார்கள். அப்படிப் பார்த்தால், இந்துக்களிலும் பெரும்பான்மையானோர் இன்று அப்படித்தான் இருக்கிறார்கள். சினிமா தியேட்டர்களில், பொது மக்கள் கூடும் பொது இடங்களில், போக்குவரத்து வாகனங்களில், மதுபான கூடங்களில் எங்குமே இந்துக்கள் சாதி பார்ப்பதில்லையே! திருமணத்தில் மட்டும்தானே சாதி பார்க்கிறார்கள். இந்த விஷயத்தில் கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
இப்படிப்பட்டவர்களைப் பற்றித்தான் ஆண்டவர், *_"வாய்ச் சொல்லால் இம்மக்கள் என்னை அணுகுகின்றனர்; உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலையில் இருக்கிறது; இவர்களது இறையச்சம் மனனம் செய்த வெறும் மனித கட்டளையைச் சார்ந்ததே! (எசாயா 29:13)"_* என்கிறார்.
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விடுதலையைத் தேடி கிறிஸ்தவத்துக்கு வருவதுபோல, சாதியால் பாதிக்கப்பட்டவர்கள் சமத்துவத்தைத்தேடி இயேசுவிடம் வந்திருந்தால், _"மருத்துவர்களால் கைவிடப்பட்ட என்னை இயேசு கிறிஸ்து குணமாக்கினார்"_ என்று பலர் சாட்சியம் சொல்வதுபோல, "நான் சாதிவெறி உடையவனாக இருந்தேன்; இயேசு என்னை சாதிவெறியிலிருந்து விடுவித்தார், தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுவித்தார்"* என்று பலர் சாட்சியம் சொல்லியிருப்பார்கள். அது எவ்வளவு மேன்மையாக இருந்திருக்கும்!
_*(சாதியமே கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடை*_ என்னும் புத்தகத்திலிருந்து.......)